நண்பனின் மரணம் தந்த அதிர்ச்சி
சில மணி துளிகள்தான்
சற்று நேரத்திலேயே
சாதாரணமாய் பேச முடிந்தது.
ஏன் சிரிக்கவும் முடிந்தது

மரமா நீ?
மனிதன்தானா ?
மனசாட்சியே இல்லை உனக்கு
என்கிறான்
இன்னொரு நண்பன்.

உதிரும் இலையைப் பார்க்கும்
இன்னொரு இலைக்கு
இருக்குமா மனசாட்சி
என்றபடியே பின்தொடர்ந்தேன்
எல்லோரையும்
ஒரு இலையாய்.

அக்காவைப் பற்றி

2 comments - Post a comment


அக்காவைப் பற்றி
ஆயிரம் சொல்லலாம்
அவள் சிரிப்பில் கவலையெல்லாம்
கரைந்து போகாது
ஆனால் என்ன அழகாயிருக்கும்
 
எனதை போலவே
அவளுலகம் அவளுக்கு
அத்துமீறி உள்ளே போ
அவள் ரௌத்திரம் தெரியும் உனக்கு
 
படித்தது என்னவோ
இருவரும் கார்ப்ரேஷன் பள்ளிதான்
அவளால் வாத்திகளிடம் கிடைத்த
ஒரு சில சலுகைகள் தவிர
பத்திரமாய் ஒரு வருடம் கழித்து
என்னிடம் வரும்
பழைய புத்தகங்கள்தான் மிச்சம்.
 
நல்லவேளை
அக்காவாய் போனதால்
துணிகள் அப்படியே வரவில்லை
அவள் நீலப்பாவாடை
கால் டவுசராய் ஆகும்
சில சமயம் தவிர
 
தம்பிக்கு வேண்டுமென்று
இனிப்பெல்லாம்
பகிர்ந்தெல்லாம் தரமாட்டாள்
என்னுடையதை பிடுங்காமல்
இருந்தால் சரி.
 
என் அக்காவைப் பற்றி
ஆயிரம் சொல்லலாம்.
 
வரும்போதெல்லாம்
கைநிறைய இனிபோடும்
வாய்நிறைய சிரிப்போடும்
என்னுடன் இப்பொழுது
அன்பாய் இருக்கும் இவள்
விஜியின் அம்மா
 

கவிதை

No Comment - Post a comment


கோடை விடுமுறையை
பாட்டி வீட்டில் கழித்துவிட்டு
ஜூன் மாதம் பள்ளி செல்ல
வீடு திரும்ப அடம்பிடிக்கும்
குழந்தையாய்
உன் நினைவை விட்டு வெளிவர
மறுக்கிறது என் மனம்
எப்பொழுதும்.
 

கவிதை

No Comment - Post a comment

முதுகில் கழி கட்டி
தொங்கவிட்ட புல்லுக்கட்டுக்கு
ஆசைப்பட்டு ஓடும் கழுதையாகவே
முடிந்துவிட்டது என் வாழ்வும்.

பூக்களில் உறங்கும் மௌனங்கள்

1 comments - Post a comment


சில நாட்களாய்
அசாத்யமானதிற்கு ஆசைபடுவதே
வழக்கமாகிவிட்டது
அது அசாத்யமானதா என்பதும் தெரியவில்லை.

குழந்தை என்பதான ஓவியம்தான் சாத்தியமாகிறது
எப்படி கொண்டுவர
குழந்தை என்பதான ஓவியமன்றி
ஒரு குழந்தையை ஓவியத்தில்

தனிமையில் தகிக்கும் வெறுமையின் தெறிப்பை
எப்படி உணர்த்த
என் வார்த்தைகளில் உனக்கு

மரணத்தை மரணமின்றி
எப்படி உணர

பூக்களில் உறங்கும் மௌனத்தை
பெயர்க்க வேண்டும்
பூக்களின் மொழியில்

என் கவிதை

2 comments - Post a comment


பொங்கி பிரவகித்துச் சுழித்து
குடிலடித்துச் செல்லும்
பேராற்றின் சீற்றம் போலல்ல
மலர் மிதந்து செல்லும்
சிற்றோடையாய் இருந்தால் போதும்
எப்பொழுதும் என் கவிதை

"ஒற்றை ரகசியம்" - உமா மகேஸ்வரி

No Comment - Post a comment

என் மென்மைகளை
ஊற்றிவிடுகிறேன் ஒவ்வொரு நாளும்
செம்பருத்தியின் வேருக்கு

உருட்டி வைக்கிற எனது
நட்புணர்வில்
அலகு பதிக்கும் காகம்
உன்னைக் கண்டதேயில்லை

நமதில்லாத குழந்தைகளைத் தழுவும்போதுதான்
தளிர்க்கிறது என் தாய்மை நிபந்தனைகளின்றி

நள்ளிரவில்
நட்சத்திரங்கள் தேங்கிய மாடித்தளம்
என் பாதம் வழி ஊடுருவிப்
பகிரும் கிளர்ச்சிகளை
ஒவ்வொரு மழையின் போதும்
இளகிப் பொழிவித்திட முடிகிறது என்னையும்

மோகங்கள் தாபங்கள்
முற்றுப்பெறாத சஞ்சலங்கள்
மற்றும் நீ தொடவொண்ணாத
தூய்மையின் ஆழங்களோடு
சாறுகள் பிழிபட்ட
வெற்றுச் சக்கையின் கிடப்பே
உன் கட்டிலுக்கு என்றுணர்கையில்
அடைகிறேன் உனை வென்ற உவகையை
நீ அறியவியலா ஒற்றை ரகசியமாக