"ஒற்றை ரகசியம்" - உமா மகேஸ்வரி

No Comment - Post a comment

என் மென்மைகளை
ஊற்றிவிடுகிறேன் ஒவ்வொரு நாளும்
செம்பருத்தியின் வேருக்கு

உருட்டி வைக்கிற எனது
நட்புணர்வில்
அலகு பதிக்கும் காகம்
உன்னைக் கண்டதேயில்லை

நமதில்லாத குழந்தைகளைத் தழுவும்போதுதான்
தளிர்க்கிறது என் தாய்மை நிபந்தனைகளின்றி

நள்ளிரவில்
நட்சத்திரங்கள் தேங்கிய மாடித்தளம்
என் பாதம் வழி ஊடுருவிப்
பகிரும் கிளர்ச்சிகளை
ஒவ்வொரு மழையின் போதும்
இளகிப் பொழிவித்திட முடிகிறது என்னையும்

மோகங்கள் தாபங்கள்
முற்றுப்பெறாத சஞ்சலங்கள்
மற்றும் நீ தொடவொண்ணாத
தூய்மையின் ஆழங்களோடு
சாறுகள் பிழிபட்ட
வெற்றுச் சக்கையின் கிடப்பே
உன் கட்டிலுக்கு என்றுணர்கையில்
அடைகிறேன் உனை வென்ற உவகையை
நீ அறியவியலா ஒற்றை ரகசியமாக